1954 – திமுக வரலாறு

குலக்கல்விக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கருத்து மோதல் ஏற்பட்டது. முக்கியமாக காமராஜர், வரதராஜுலு நாயுடு, கோசல்ராம், வி.கே ராமசாமி முதலியார் உள்ளிட்ட தலைவர்களுக்கு கடும் அதிருப்தி.

தலைவர்களின் மனநிலை, ராஜாஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் குலக்கல்வி முறையில் இருந்து பின்வாங்க விரும்பவில்லை. குலக்கல்வி முறையை சட்டமாக்குவதற்கு பெரும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கூடியது.திரு.ராஜாஜி அவர்கள் உடல்நிலை சரி இல்லை என்று காரணம் கூறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தார். குலக்கல்வித் திட்டம் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் பதவியை விட்டே விலகினார் ராஜாஜி.

அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கே இடமில்லாமல், திரு.காமராஜர் அவர்கள் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.13 ஏப்ரல் 1954 இல் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் திரு.காமராஜர் அவர்கள் பதவியேற்ற உடனே, குலக்கல்வித் திட்டத்திற்க்கு முடிவுரை எழுதினார்.

“போராட்டம், மறியல், கைது, சிறைவாசம் என்ற கடுமையான அடக்குமுறைகளை தாங்கிக்கொண்டு, போராட்டம் நடத்தியதற்கான வெற்றியே குலக்கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது” என்று கொண்டாடினார்கள் திமுகவினர்.

திரு.காமராஜர் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றபோது, சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது மேலவை உறுப்பினராகவோ இல்லை. பதவியேற்றவுடன் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்கு மேலவை உறுப்பினராக இருக்க விருப்பமில்லை. தேர்தலில் போட்டியிடவே விரும்பினார்.

அப்பொழுது, குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. அந்த தொகுதியில் நிற்பது என்று முடிவு செய்தார்.கம்யூனிஸ்ட் கட்சி, திரு.காமராஜர் அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது.

தந்தை பெரியார் அவர்கள் காமராஜர் அவர்களை ஆதரித்தார். 1925ல் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறிய பின்பு, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தது இதுவே முதல்முறை. காரணம், குலக்கல்வி ஒழிப்பு.

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரை, அண்ணா அவர்கள் நிறைய யோசித்தார்கள். தேர்தல் அரசியலில் இறங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பமான நிலை வேறு. அத்தோடு, திரு.காமராஜர் அவர்களை எதிர்த்தால், திரு.ராஜாஜி அவர்களை ஆதரிப்பது போன்று ஆகிவிடும். ராஜாஜியை ஆதரித்தால் குலக்கல்விக்கு அதரவளித்ததைப்போல் ஆகிவிடும்.அதனால், ராஜாஜி அவர்களை ஆதரிக்க அண்ணாவிற்கு துளியும் விருப்பமில்லை. அதன் காரணமாகவே, திரு.காமராஜர் அவர்களை ஆதரிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார் அறிஞர்.அண்ணா.

மாற்று கட்சியினராக இருந்த பொழுதும், குல கல்வியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் போன்றவை திரு.காமராஜர் அவர்களை ஆதரித்தார்கள். தேர்தலில், காமராஜர் அவர்களுக்காக தேர்தல் வேலைகள் செய்தார்கள். திரு.காமராஜர் அவர்கள் வெற்றி பெற்றார்.

உதயசூரியன் சின்னத்தை உருவாக்கியது திரு.ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

1929 இல் சுயமரியாதை இயக்க மாநாட்டிற்காக கொடி தயாரிக்கப்பட்டது. தியாகராயர்,டி.எம்.நாயர்,பனங்கல் அரசர்,பெரியார் ஆகியோரின் உருவத்தோடு சூரியன் உதிப்பது போல இருக்கும். ஆனால், இரண்டு மலைகளுக்கிடையே சூரியன் உதிப்பதை போன்ற சின்னம், ரெட்டைமலை இயக்கத்தை சேர்ந்தது.

3 அக்டோபர் 1954ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விக்ரவாண்டி தொகுதியில் காணை,காஞ்சனூர் பகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார் திரு ஏ.கோவிந்தசாமி. அன்றைக்கு உதயசூரியன் திமுகவின் கட்சி சின்னம் அல்ல.

பின்னாளில் இதுவே திமுகவின் கட்சி சின்னமாகி, இந்திய அரசியலிலும்,தமிழக அரசியலிலும் ஆளுமைச் சின்னமாக மாறும் என்பதை அன்று யாரும் கணித்திருக்க வாய்ப்பில்லை.

திமுக சட்டமன்றத்தில் நுழைவது ஆபத்தானது. ஆட்சியின் பக்கம் கவனம் திரும்பினால், கழகத்தின் பிரச்சாரங்களில் தொய்வு ஏற்பட ஆரம்பித்து விடும் என்ற கொள்கை கொண்டிருந்தார் அறிஞர் அண்ணா அவர்கள். இதனை மாற்றிய பெரும் பங்கு திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களையே சேரும்.

1954இல் மூன்று பேர் கொண்ட எல்லை நிர்ணய குழு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பசல் அலி அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்திற்கு வந்த அவர்கள் அனைத்து கட்சியின் கருத்துக்களை கேட்டறிந்தனர். அப்போது திமுக சார்பாக அறிஞர் அண்ணாவால் தெரிவிக்கப்பட்ட கருத்து:

மொழி வாரி மாகாணப் பிரிவினையை, திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. சென்னை மாகாணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிப் பிரிவுகளை உள்ளடக்கியது. ஆகவே இந்த நான்கு மொழி பிரிவுகளை அமைப்பதுதான் உடனடி தேவை என்பதை திமுக எடுத்துக் காட்ட விரும்புகிறது. எந்த ஒரு மொழிப் பிரிவும், மற்றொரு மொழிப் பிரிவின் நிலப்பரப்பை அபகரித்துக் கொள்ளாதவாறு அதிகாரத்தில் உள்ளோர் முழு கவனம் செலுத்த வேண்டும். விசால ஆந்திரம், சம்யுக்த கர்நாடகம், ஐக்கிய தமிழகம், ஐக்கிய கேரளம் என்ற பெயரால் உலவும் கோரிக்கைகளை திமுக வரவேற்பதுடன்,ஆதரவும் அளிக்கிறது. ராஜ்யங்களை திருத்தி அமைப்பது நிலப்பரப்பை பொறுத்து மட்டுமல்ல. ராஜியங்களுக்கு ஒதுக்கப்படும் அதிகாரங்களை பொருத்தும் மாறுதல் வேண்டும் என்பதை திமுக வலியுறுத்துகிறது. அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்,மொழிவாரி பிரிவினை வேண்டும் என்ற இரண்டுடின் சேர்க்கையே திராவிடநாடு கோரிக்கை. என்று எடுத்துரைத்தார் பேரறிஞர் அண்ணா.

இதே ஆண்டில் அறிஞர்அண்ணா அவர்களால் கதை வசனங்கள் எழுதப்பட்டு, வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். இந்த படம் மடாதிபதிகளை விமர்சனம் செய்யும் கதை. திமுக, திரைப்படங்கள் மூலமாக மூடநம்பிக்கைகளையும், பிராமணர் ஆதிக்கத்தையும் முழுமையாக எதிர்த்தது.

கட்சி கொள்கைகளை பலப்படுத்த, தொண்டர்கள் இடத்தில் கொண்டு சேர்க்க சினிமாவும்,நாடகமும்,பத்திரிக்கையும் ஆகப்பெரும் சக்தியாக அன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உதவியது.

வரலாறு விரியும்… நாளை 1955 ஆம் ஆண்டு.

Published by Tamil Selvi Raja

எழுத்தாளர் - திமுக பொதுக்குழு உறுப்பினர் - திமுக வரலாற்றை இணையத்தில் இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லும் முயற்சி

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started